மதுக்கடைகளை மூடக்கோரி தனியார் கல்லூரி மாணவ–மாணவிகள் சாலை மறியல்


மதுக்கடைகளை மூடக்கோரி தனியார் கல்லூரி மாணவ–மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Aug 2017 5:00 AM IST (Updated: 10 Aug 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி அருகே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி தனியார் கல்லூரி மாணவ–மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை கொசப்பூர்–மாதவரம் இணைப்பு சாலை அருகே தனியார் கல்லூரி உள்ளது. இதன் அருகே கடந்த மாதம் புதிதாக 2 மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அருகிலேயே 2 பார்களும் இயங்குகின்றன. இந்த பார்களில் அதிகாலை முதலே திருட்டுத்தனமாக மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

மாதவரத்தில் இருந்து இந்த கல்லூரிக்கு பஸ்சில் வந்து இறங்கும் மாணவிகள், இந்த மதுக்கடை பார்களை தாண்டிதான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். அப்போது மதுபிரியர்கள், குடிபோதையில் மாணவிகளை பார்த்து கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

இதனால் கல்லூரி மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவ–மாணவிகள் 1,500–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கல்லூரி அருகே உள்ள 2 மதுக்கடைகளையும் மூடக்கோரி அந்த மதுக்கடைகள் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் 11.30 மணி வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம் தாசில்தார் முருகானந்தம், மாதவரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியம், வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது தாசில்தார் முருகானந்தம், ‘‘நாளை(அதாவது இன்று) திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் இதுபற்றி எடுத்து கூறி 2 மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுப்பதாக’’ உறுதி அளித்தார்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு மாணவ–மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story