அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம்


அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:15 AM IST (Updated: 10 Aug 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோக்களுக்கு சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் அபராதம் விதித்தார்.

சிவகாசி,

சிவகாசியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு வந்து, செல்ல ஆட்டோக்களை அதிகஅளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஒரு சில ஆட்டோக்களில் அரசு அனுமதித்த 5 பேரை விட அதிஅளவில் மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்பட்டு வந்தனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் சிவகாசி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் திடீர் சோதனை நடத்தி விதிமீறும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்க போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேலுக்கு உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேல் நேற்று சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது 10 ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகஅளவில் குழந்தைகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆட்டோக்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது 4 ஆட்டோக்களில் உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் கூறியதாவது:–

சிவகாசி பகுதியில் அதிஅளவில் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்த ஆட்டோக்கள் அனைத்து விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி குழந்தைகளையும் அழைத்து வரும் ஆட்டோக்கள் அரசு அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வர வேண்டும். அதே நேரத்தில் 5 குழந்தைகளை மட்டுமே ஆட்டோவில் அழைத்து வர வேண்டும். கூடுதல் குழந்தைகளை அழைத்து வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story