சிவகாசி பஸ் நிலைய விரிவாக்க பகுதியில்வாகன நிறுத்தம் அமைக்க வலியுறுத்தல்
சிவகாசி பஸ் நிலைய விரிவாக்க பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
சிவகாசி,
கலெக்டர் சிவஞானத்துக்கு காங்கிரஸ் கட்சியின் பட்டதாரி அணியின் மாநில நிர்வாகி மைக்கேல் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சிவகாசி பஸ் நிலையம் தற்போது நெரிசல் அதிகமாக இருப்பதால் அதை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் போது பொதுமக்களுக்கு வசதியாக வாகன நிறுத்தமும் ஏற்படுத்தப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதிய கடைகள் தான் அதிகளவில் கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏதாவது நன்மை உண்டா? என்றால் இல்லை.
அதே போல் சிவகாசி பஸ் நிலையத்தில் தற்போது உள்ள வாகன காப்பகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வாகன காப்பத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்க இடம் இல்லாமல் வாகனங்கள் காப்பகத்தின் வெளியே மழை, வெயிலில் திறந்தவெளியில் நிறுத்தப்படுகிறது. ஆனால் இதற்கும் வாகன காப்பகத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சிவகாசி நகராட்சி வளர்ச்சி பெற்று இருப்பதால் அந்த பகுதியில் இருந்து பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து வெளியூர் செல்ல நினைப்பவர்கள் தங்களது இருச்சக்கர வாகனங்களில் பஸ் நிலையம் வருகிறார்கள். ஆனால் பஸ் நிலையத்தில் அவர்களின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த போதிய இடவசதி இல்லை.
இதனால் போலீசாரால் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை தற்போது உள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் கூடுதலாக போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எதிர்காலத்தில் வாகனங்களின் பயன்பாடு அதிகளவில் இருக்கும். எனவே அதை கருத்தில் கொண்டு தற்போது விரிவாக்க பணி நடைபெற்று வரும் பகுதியில் ஏதாவது ஒரு பகுதியின் அடித்தளத்தில் (அண்டர்கிரவுண்டு) வாகனம் நிறுத்த போதிய இட வசதி செய்து கொடுத்தால் பொதுமக்களுக்கு பெரிதும் பயனாக இருக்கும்.
இதற்காக தற்போது கூடுதல் செலவு ஏற்பட்டாலும் இந்த தொகை வாகன காப்பகத்தை ஏலம் விடுவதன் மூலமாகவோ அல்லது வாகனங்களுக்கு பாதுகாப்பு கட்டணம் வசூல் செய்வது மூலமாகவோ அந்த பணத்தை திரும்ப பெற்றுவிடலாம் எனவே பஸ் நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது விரிவாக்க பகுதியில் வாகன காப்பகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.