கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ஸ்ரீதர் மகனிடம் விசாரணை நிறைவு பெற்றது
கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ஸ்ரீதர் மகனிடம் விசாரணை நேற்று நிறைவடைந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. காஞ்சீபுரம் கோர்ட்டு அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது. தற்போது அவர் வெளிநாட்டில் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீதரின் பலகோடி சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் (வயது 24) லண்டனில் இருந்து சென்னை வந்தபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மடக்கி காஞ்சீபுரம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கினர்.
இதனிடையே சந்தோஷ்குமார் தனது பாஸ்போர்ட் முடக்கியதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அப்போது காஞ்சீபுரத்தில் ஸ்ரீதர் செய்த ஒரு கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சந்தோஷ்குமாரின் மடிக்கணினி, செல்போனில் உள்ளது என்றும், அதற்காக விசாரணை செய்ய அனுமதி கேட்டும் ஐகோர்ட்டில் போலீசார் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் சந்தோஷ்குமார் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி கடந்த 19–ந் தேதி முதல் போலீஸ் நிலையத்தில் சந்தோஷ்குமார் ஆஜரானார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணை 1–ந் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் விசாரணை அதிகாரிகளான இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சரவணன் ஆகியோர் மேலும் ஒருவாரத்துக்கு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர்.
இதையடுத்து சந்தோஷ்குமார் கடந்த 2–ந் தேதியில் இருந்து போலீஸ் நிலையத்தில் மீண்டும் விசாரணைக்காக ஆஜரானார். கடைசி நாளான நேற்று சந்தோஷ்குமார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை.
இது குறித்து போலீசார் கூறுகையில், சந்தோஷ்குமாரிடம் விசாரணை நிறைவு பெற்று உள்ளது. விசாரணை குறித்து எந்த தகவலையும் தற்போது தெரிவிக்க இயலாது. அது குறித்த விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வோம் என்றனர்.