பந்தலூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் ரூ.38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
பந்தலூரில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் ரூ.38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
பந்தலூர்,
பந்தலூரில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூடலூர் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) முருகன் வரவேற்று பேசினார்.
முகாமில், ஓய்வூதியம், தொடக்க வேளாண்மை வங்கி கடன்கள், ஈமசடங்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு போன்றவை வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 114 பேருக்கு ரூ.38 லட்சத்து 8 ஆயிரத்துக்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மாவட்ட நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்த முடியும். பொதுமக்களுக்கு குறைகள் இருந்தால் நேரடியாக என்னிடம் மனுவாக கொடுக்கலாம். இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று குறைகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோயில் இருந்து தங்களை காத்துக்கொள்ளலாம். தற்போது பரவலாக வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளை சுற்றி குப்பைகள் குவிந்து கிடந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.
தற்போது இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இதை தடுப்பதற்காக தனியார் தோட்ட பகுதிகளில் சிலர் மின்வேலி அமைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மின்வேலி அமைக்கப்பட்டதன் காரணமாக காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து கூடலூர் தொகுதி எம்.எல்.ஏ. புகார் தெரிவித்து உள்ளார். அதுபற்றி நேரில் ஆய்வு செய்து மின்வேலிகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், திராவிடமணி எல்.எல்.ஏ., மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தனலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஸ்ரீதரன், பந்தலூர் தாசில்தார் மீனாட்சி சுந்தரம், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் நடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.