½ மணி நேரம் பெய்த மழைக்கு திருச்சி வடிகால் வசதி இல்லாததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது


½ மணி நேரம் பெய்த மழைக்கு திருச்சி வடிகால் வசதி இல்லாததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ½ மணி நேரம் மழை பெய்தது. வடிகால் வசதி இல்லாததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

திருச்சி,

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. இந்நிலையில் திருச்சியில் நேற்று பகல் முழுவதும் வெயில் கொளுத்தியது. மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையினால் திருச்சி நகரில் ஜங்‌ஷன், மத்திய பஸ் நிலையம், பாரதிதாசன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றது.

மழை பெய்து கொண்டிருந்த போது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அருகில் பாதாள சாக்கடை திறப்பானில் இருந்து வெளியேறிய கழிவு நீர், நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் மழை நீருடன் சாக்கடையும் சேர்ந்து ஓடியது. மழை நீர் வடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் மழை நீர் வடிந்து செல்வதற்கு வழி இன்றி சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களும், இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களும் கடும் அவதிப்பட்டனர். ½ மணி நேரம் பெய்த மழையை கூட தாங்க முடியாத அளவில் திருச்சி நகரம் உள்ளதே என அவர்கள் வேதனையுடன் புலம்பி சென்றனர்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள நந்தியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சங்கேந்தியை அடுத்த பாலம் அருகே நந்தியாற்றின் கரை உடைந்து வயல்களில் வெள்ளநீர் புகுந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால், நேரம் செல்ல செல்ல வெள்ளப்பெருக்கு கூடுதலாகி இருதயபுரம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் டெய்சி, பாக்கியராஜ், ஜான்சன், துரை உள்பட 9 பேரின் வீடுகளில் மழைநீர் புகுந்தது.

வீட்டில் இருந்தவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் லால்குடி தாசில்தார் ஜவர்கலால்நேரு, புள்ளம்பாடி வருவாய் ஆய்வாளர் கணேசன், ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவள்ளி, லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு செட்ரிக் இமானுவேல், கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் இருதயபுரம் கிராமத்திற்கு சென்று பார்வையிட்டு வெள்ளம் வடிந்து செல்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருதயபுரம்–புள்ளம்பாடி இடையே உள்ள நந்தியாற்றில் 2015–16–ம் ஆண்டு, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் ரூ.3 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால், ஆற்றின் கரைகளை பலப்படுத்தாததாலும், பு.சங்கேந்தி–புள்ளம்பாடி இடையே உள்ள பாலத்திற்கு மேற்குபுறத்தில் உள்ள கூடலூர் வரை ஆற்றின் முட்புதர்களை அகற்றாததாலும் மழைநீர் புகுந்ததாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:–

தேவி மங்களம்–80.40, நவலூர் குட்டப்பட்டு 75.20, நந்தியாறு தலைப்பு–63.20, சிறுகுடி–47, புள்ளம்பாடி–45.80, முசிறி– 40, துறையூர்–35, வாத்தலை அணைக்கட்டு–33.40, கல்லக்குடி–31.20, மருங்காபுரி–30.40, புலிவலம்–20, லால்குடி–17,

கோவில் பட்டி – 15.20

திருச்சி விமான நிலையம் – 12.80

திருச்சி ஜங்‌ஷன் – 11.00

திருச்சி டவுண் – 11.00

பொன்மலை – 10.80

மணப்பாறை – 10.80

சமயபுரம் – 10.00

துவாக்குடி ஐ.எம்.டி.ஐ. – 9.00

தா பேட்டை – 5.00

பொன்னணியாறு அணை – 4.40

கொப்பம்பட்டி – 3.00

மொத்தம் – 621.60

சராசரி – 24.86


Next Story