குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்


குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:15 AM IST (Updated: 10 Aug 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி குளித்தலை ஒன்றிய அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குளித்தலை,

குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இரண்யமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது மேலப்பட்டி கிராமம். இப்பகுதி பெண்கள் நேற்று காலை குடிநீர் வழங்கக்கோரி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் உள்ளே காலிக்குடங்களுடன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பெண்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

மேலப்பட்டி பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, மின்மோட்டார் பழுது ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இங்குள்ள அடி பம்புகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்தி வருகிறோம். போதிய தண்ணீர் கிடைக்காத காரணத்தால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக எங்கள் பகுதியில் உள்ள அடி பம்புகளை சரிசெய்து தண்ணீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதேபோல் அதிகமான ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து நிரந்தரமாக குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரபரப்பு

இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான கூட்டம் நடப்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்த கூட்டத்திற்கு சென்றுள்ளனர். அதிகாரிகள் வந்த பிறகு இதுகுறித்து அவர்களிடம் தெரிவித்து நாளை (இன்று) மேலப்பட்டி பகுதியை பார்வையிட்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தனர். இதையடுத்து தங்கள் கோரிக்கையை மனுவாக அலுவலர்களிடம் அளித்த பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story