விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 10 Aug 2017 4:15 AM IST (Updated: 10 Aug 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து பெரம்பலூர் கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சித்தளி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 35). விவசாயி. கடந்த 2013-ம் ஆண்டு இவர், திருச்சி சமய புரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார். திருச்சி சிறுகனூர் அருகே வந்த போது, அவ்வழியாக வந்த அரசு பஸ் திடீரென ராஜா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனையடுத்து அதற்கான இழப்பீடு வழங்கக்கோரி ராஜாவின் மனைவி பூபதி (29) பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 25.3.2013-ல் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி, ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்தை ராஜாவின் குடும்பத்துக்கு திருவண்ணாமலை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என கடந்த 30.10.2014-ல் தீர்ப்பு வழங்கினார்.

இதற்கிடையே இழப்பீட்டு தொகையை குறைக்ககோரி திருவண்ணாமலை கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. பின்னர் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்தை இழப்பீடாக ராஜாவின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். எனினும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இழப்பீட்டு தொகை வழங்கப்படாததால் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை பூபதி தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதி பாலராஜமாணிக்கம், ராஜாவின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காமல் இழுத்தடிப்பதால் பெரம்பலூருக்கு வரும், திருவண்ணாமலை கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும். மேலும் வட்டியுடன் சேர்த்து ரூ.14 லட்சத்து 54 ஆயிரத்து 427-ஐ அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் பேரில் வேலூரில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் வழியாக திருச்சி நோக்கி செல்ல இருந்த பஸ்சை நேற்று கோர்ட்டு ஊழியர்கள் பெரம்பலூரில் ஜப்தி செய்தனர். ஜப்தி செய்யப்பட்ட அந்த பஸ் பெரம்பலூர் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சிலிருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங் களுக்கு சென்றனர். 

Related Tags :
Next Story