‘‘நீட்’’ தேர்வு விவகாரத்தில் 2 நாளில் முடிவு தெரியும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி


‘‘நீட்’’ தேர்வு விவகாரத்தில் 2 நாளில் முடிவு தெரியும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2017 5:00 AM IST (Updated: 10 Aug 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

‘‘நீட்‘‘ தேர்வு விவகாரத்தில் 2 நாளில் முடிவு தெரியும் என்பதால் மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதற்கு சிலர் பலியாகி உள்ளனர். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று சேலம் வந்தனர்.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்ததுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த புகைதெளிப்பான் கருவிகளை ஆய்வு செய்தார். இதையடுத்து அங்கு அமைச்சர் தலைமையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். டெங்கு காய்ச்சல் அறிகுறி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகளுக்கு சென்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர், சிறுமிகள் உள்பட பலரை அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளது. இதை தடுக்க தமிழகத்தில் கள ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 12 சுகாதார மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறேன். மேலும் டெங்குவை தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் இன்னும் 10 நாட்களில் காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்தி விடுவோம். இதை 100 சதவீதம் உறுதியாக கூற முடியும். மர்ம காய்ச்சல் என ஏதும் இல்லை. 24 மணி நேரத்தில் அது எந்தவிதமான காய்ச்சல் என்பதை தெளிவாக கூறும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வக வசதிகள் உள்ளன. காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘‘நீட்‘‘ தேர்வு விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளன. கடந்த ஆண்டு விதிவிலக்கு பெற்றதை போன்று நடப்பு ஆண்டும் பெற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ‘‘நீட்‘‘ தேர்வு பிரச்சினையில் தமிழக அரசு சார்பில் உச்சக்கட்ட அழுத்தத்தை மத்திய அரசிடம் கொடுத்து இருக்கிறோம். இதுதொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு கடைசி வரை போராடும். ‘‘நீட்‘‘ தேர்வு விவகாரத்தில் இன்னும் 2 நாளில் முடிவு தெரியும். இதனால் மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் சம்பத், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், சக்திவேல், சித்ரா, வெற்றிவேல், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி, டீன் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story