பா.ம.க. சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் சேலத்தில் ஜி.கே.மணி பேட்டி


பா.ம.க. சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் சேலத்தில் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2017 7:00 AM IST (Updated: 10 Aug 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை உபரிநீரை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய உள்ளதாக சேலத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க பொதுக்குழு கூட்டம் சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.

துணை பொதுச்செயலாளர்கள் கண்ணையன், குணசேகரன், இணை செயலாளர் இசக்கி, அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர்கள் கதிர்ராசரத்தினம், சாம்ராஜ், அண்ணாதுரை, ராமகிருஷ்ணன், மாநில மாணவர் அணி செயலாளர் வக்கீல் விஜயராசா, மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, வைகை, தாமிரபரணி, அமராவதி, பவானி ஆகிய ஆறுகளில் தடுப்பணை கட்டி ஒரு சொட்டு தண்ணீர் கூட கடலுக்கு செல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் பா.ம.க. சார்பில் தாமிரபரணியை காப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டோம். அந்த வகையில் வருகிற 19 மற்றும் 20–ந் தேதி ஆகிய 2 நாட்களில் மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் வகையில் பா.ம.க. சார்பில் விழிப்புணர்வு பிரசார பயணம் நடக்கிறது. இதில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொள்கிறார்.

வருகிற 19–ந் தேதி மேட்டூர் 16 கண் பாலத்தில் இருந்து தொடங்கி சேலம் மேற்கு பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறோம். அன்றைய தினம் மாலை சேலத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதே போல 20–ந் தேதி அயோத்தியாபட்டணத்தில் பிரசாரம் தொடங்கி அன்று மாலை 6 மணிக்கு ஆத்தூரில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

அடுத்த மாதம் (செப்டம்பர்) 17–ந் தேதி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் சமூகநீதி மாநாடு நடக்கிறது. இது தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனை மாநாடாக அமையும்.

இதுவரை வரி இல்லாத 500–க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள், காய்கறிகள், உணவு பொருட்கள், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சேலம் சுற்றுவட்டார மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க. சார்பில் நாளை (இன்று) சேலத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.


Next Story