கதிராமங்கலத்தில் கிராம மக்கள் 29–வது நாளாக காத்திருப்பு போராட்டம்


கதிராமங்கலத்தில் கிராம மக்கள் 29–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:36 AM IST (Updated: 10 Aug 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலத்தில் 29–வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓ.என்.ஜி.சி. வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

திருவாலங்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி வனதுர்க்கை அம்மன் கோவில் பகுதியில் இருந்த குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை கைது செய்தனர். இதை கண்டித்தும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக்கோரியும் கதிராமங்கலம் அய்யனார் கோவில் திடலில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.என்.ஜி.சி. தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு நேற்று முன்தினம் தஞ்சை கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. பேராசிரியர் ஜெயராமனுக்கு இந்த வழக்கில் ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று 29–வது நாளாக அய்யனார் கோவில் திடலில் காத்திருப்பு போராட்டம் நீடித்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனின்) மாவட்ட தலைவர் கண்ணையன் ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வருகிற 16–ந் தேதி கதிராமங்கலம் வந்து மக்களை சந்திக்கிறார் என்று லோகநாதன் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், கைது செய்யப்பட்ட தர்மராஜன், ரமேஷ் ஆகிய 2 பேருக்கு மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம், போலீசார் வழக்குப்பதிவு செய்யும் போது அவர்களின் பெயரை தவறாக எழுதியுள்ளனர். இந்த தவறை செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் தவறாக உள்ளது என்பது குறித்து அறிந்தவுடன் அதற்குரிய மனுவை கொடுத்துள்ளோம்.

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனை ஜாமீனில் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் தினமும் திருச்சி, மதுரை சென்று கையெழுத்து போட வேண்டும். இதற்கு அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யாமலேயே இருந்திருக்கலாம். கைது செய்யப்பட்ட 10 பேர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற்று, விடுதலை செய்ய வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும் என்றார். தொடர்ந்து விறகு அடுப்பில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாப்பிட்டனர்.



Next Story