வரதட்சணைகேட்டு கொடுமை பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் அண்ணாநகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் ரத்தினகுமார் (வயது 46). கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவருக்கும் ஆலக்குடியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் பரமேஸ்வரிக்கும் திருமணம் நடந்தது. ரத்தினகுமார்– பரமேஸ்வரி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில் ரத்தினகுமார் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2010–ம் ஆண்டு ஜூன் மாதம் 3–ந்தேதி இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரத்தினகுமார் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்தார்.
பின்னர் பரமேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என மற்றவர்களை நம்ப வைப்பதற்காக மண்எண்ணெய்யை ஊற்றி அவரது உடலுக்கு தீ வைத்தார். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரத்தினகுமார் தனது மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரத்தினகுமாருக்கு இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின்படி கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், பிரிவு 498– வரதட்சணை கொடுமை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.1000 அபராதமும், பிரிவு 201– கொலை செய்த தடயத்தை மறைத்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனையை ரத்தினகுமார் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.