பெங்களூருவில் கடைகளின் பெயர் பலகைகள் கட்டாயம் கன்னடத்தில் இருக்க வேண்டும்


பெங்களூருவில் கடைகளின் பெயர் பலகைகள் கட்டாயம் கன்னடத்தில் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:48 AM IST (Updated: 10 Aug 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கடைகளின் பெயர் பலகைகள் கட்டாயம் கன்னடத்தில் இருக்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையம் கூறியுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் கடைகளின் பெயர் பலகைகள் கட்டாயம் கன்னடத்தில் இருக்க வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையம் கூறியுள்ளது. இல்லாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் அலுவலக நிர்வாகத்தில் கன்னட மொழி அமல்படுத்தப்படுவது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:–

பெங்களூரு பெரிய நகரமாக வளர்ந்துவிட்டது. இங்கு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, போலீஸ் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் கன்னட மொழியை முழுமையாக அமல்படுத்துவது என்பது சுலபமான வி‌ஷயம். இதன் மூலம் பெங்களூருவில் கன்னட மொழியை காப்பாற்ற முடியும்.

பெங்களூரு மாநகராட்சி எல்லையில் கடைகளின் பெயர் பலகைகள் கட்டாயம் கன்னடத்தில் இருக்க வேண்டும். இதற்கு வணிக நிறுவனங்களுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் பெயர் பலகைகளை கன்னடத்தில் மாற்றாவிட்டால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும். இதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அதே போல் நகர மாவட்ட நிர்வாகத்தின் எல்லையில் இருக்கும் புறசபை உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பெயர் பலகைகள் கன்னடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக அரசுக்கு உரிய பரிந்துரை செய்வேன். இந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும். பெங்களூரு நகர மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

அதிகாரிகள் தொழில் நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி எத்தனை கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விவரங்களை சேகரித்து அறிக்கை வழங்க வேண்டும். பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகம் கன்னடத்தை பயன்படுத்துவதில் முதல் இடத்தில் உள்ளது.

மாவட்ட கலெக்டர் வழக்குகள் தொடர்பான தீர்ப்புகளை கன்னடத்தில் வழங்குகிறார். இதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் அதிகமாக ஆங்கிலம் இடம் பெற்றுள்ளது. இதை சரிசெய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு எஸ்.ஜி.சித்தராமையா பேசினார்.

எஸ்.ஜி.சித்தராமையா தொடர்ந்து பேசும்போது, கன்னட பள்ளிகளின் நிலை குறித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கையை வழங்கவில்லை. இது சரியல்ல என்று எச்சரித்தார். பெங்களூருவில் ஐ.சி.எஸ்.இ., சி.பி.எஸ்.இ. ஆகிய பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் ஒரு பாடமாக கன்னடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும். இதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கன்னடத்தை கற்பிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வி அதிகாரிகளுக்கு எஸ்.ஜி.சித்தராமையா உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் நகர மாவட்ட கலெக்டர் சங்கர் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story