மனுநீதி நாள் முகாம்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாம்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:00 AM IST (Updated: 10 Aug 2017 3:59 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு, கல்லப்பாடி, அணைக்கட்டில் நடந்த மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆற்காடு,

ஆற்காடு தாலுகா மேச்சேரி மற்றும் முள்ளுவாடி ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் முள்ளுவாடி கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆற்காடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரத்னா முன்னிலை வகித்தார். தாசில்தார் சரவணன் வரவேற்றார்.

முகாமில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 53 பயனாளிகளுக்கு சிறு விவசாயி சான்று, வேளாண் இடுபொருட்கள், மின்னனு குடும்ப அட்டைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

முகாமில் 30 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்திருக்க வேண்டும். ஆனால் 10-க்கும் குறைவான துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரும்பாலான துறை அதிகாரிகள் இல்லாமல் முகாம் நடத்தப்படவே பொதுமக்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது.

முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா கல்லப்பாடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. தாசில்தார் நாகம்மாள் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் காமாட்சி, வருவாய் ஆய்வாளர்கள் வனிதா, பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ப.நாராயணன் கலந்து கொண்டு 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட சான்றிதழ்களை வழங்கினார்.

முகாமில் பொதுமக்கள் கல்லப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமிக்கப்பட்ட சுடுகாட்டு இடத்தை மீட்டு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். முகாமில் வேளாண்மை உதவி இயக்குனர் விஸ்வநாதன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லோகநாதன், கால்நடை மருத்துவர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சங்கரன் நன்றி கூறினார்.

அணைக்கட்டு ஒன்றியம் கருங்காலி மற்றும் மகமதுபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் கருங்காலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆய்வுக்குழு துணை ஆட்சியர் சி.சுமதி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலிங்கம், முன்னாள் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அணைக்கட்டு தாசில்தார் மதிவாணன் வரவேற்றார்.

முகாமில் பயனாளிகளை தவிர பொது மக்கள் யாரும் கலந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை. 2 ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களிடம் முன்னோடியாக நடந்த முகாமில் 93 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 18 பேரின் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டன. அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆய்வுக் குழு துணை ஆட்சியர் சி.சுமதி வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, “18 பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர் அவர்களுக்கு பட்டா மாற்றம் முதியோர் உதவிதொகை உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவி தொகைக்கான அத்தாட்சி சான்றிதழ் போன்றவைகள் வழங்கப்பட்டன. மீதி உள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது” என்றார்.

முகாமில் வட்ட வழங்கல் அலுவலர், வேளாண்மை துறை அலுவலர், உதவி தொடக்க கல்வி அலுவலர், சுகாதார துறை கால்நடை துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கருங்காலி கிராம நிர்வாக அலுவலர் தங்கமணி நன்றி கூறினார்.

Next Story