கால்நடை மருந்தக இடத்தில் அம்மன் கோவிலுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் முற்றுகை


கால்நடை மருந்தக இடத்தில் அம்மன் கோவிலுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Aug 2017 4:03 AM IST (Updated: 10 Aug 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை அருகே உள்ள கால்நடை மருந்தக இடத்தில் அம்மன் கோவிலுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை)

ராணிப்பேட்டை அருகே உள்ள கால்நடை மருந்தக இடத்தில் அம்மன் கோவிலுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பொதுமக்களிடம் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராணிப்பேட்டையில் இருந்து, சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ராணிப்பேட்டைக்கும், பாரதி நகருக்கும் நடுவில் ஐ.வி.பி.எம். எனப்படும் கால்நடை நோய் தடுப்பு மருந்தகம் உள்ளது. இந்த மருந்தக வளாகத்தை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திரிசூலி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது,.

பல ஆண்டுகளாக உள்ள இந்த கோவிலில் ராணிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் தொழிலாளர்களும் இந்த கோவிலில் வழிபட்டு செல்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல் பரவியதால் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள இந்த கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சிய பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் உள்பட அரசு துறையினருக்கு மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

இதோடு மட்டுமில்லாமல் இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அதில் நாகம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். கால்நடை மருந்தகத்தின் இடத்தை அனுமதியில்லாமல் கோவில் நிர்வாகத்தினர்ஆக்கிரமித்துள்ளதால் அதை அகற்ற ஐ.வி.பி.எம். நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை கேள்விப்பட்ட இப்பகுதி மக்கள் நேற்று ஐ.வி.பி.எம். அருகே உள்ள கோவில் அருகே திரண்டனர். இதையடுத்து அங்கு வந்த ஆர்.காந்தி எம்.எல்.ஏ., வாலாஜா தாசில்தார் விஜயகுமார், ஐ.வி.பி.எம். நிலைய இயக்குனர் (பொறுப்பு) சந்திரிகா, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மண்டல துணை தாசில்தார் கணேசன், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார், கோவில் நிர்வாகி எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோவில் நிர்வாகமும், பொதுமக்களும் ஐ.வி.பி.எம். நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்துள்ள இடத்திற்கு முறையாக அரசிடம் கோரிக்கை வைத்து இடத்தை கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் பேச்சுவார்த்தையின்போது கூறினர்.

இதற்காக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story