அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
கணியம்பாடியில் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அடுக்கம்பாறை,
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் மாணவ– மாணவிகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் கணியம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. அங்கு அனைவரின் வீட்டிலும் கழிவறை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும், டெங்கு காய்ச்சலை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் பேசினார்.
இதனை தொடர்ந்து கீழ்ப்பள்ளிப்பட்டு கிராமத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட வரைபடத்தை பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அரியூருக்கு அவர் சென்றார். திறந்தவெளியில் மலம் கழித்தல் பழக்கமற்ற வட்டாரங்களை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊக்குனர்களுக்கு 3 நாள் நடந்த பயிற்சியின் நிறைவு விழா அங்கு நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் ராமன் பேசியதாவது–
சுகாதாரமான கிராமமாக மாற அனைவரின் வீட்டிலும் கழிவறை கட்ட வேண்டும். டெங்கு, மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய் உருவாக சுகாதார சீர்கேடே முக்கிய காரணம். நோய் வந்த பிறகு அதை குணப்படுத்த அதிகம் செலவழிக்கிறோம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்யவேண்டியவைகளை மக்கள் மேற்கொள்வதில்லை. தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் வருகிற மார்ச் மாதத்திற்குள் அனைவரின் வீட்டிலும் கழிவறை கட்டி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மகளிர் பங்களிப்பு 100 சதவீதம் இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும். எனவேதான் பெண்களே ஊக்குனர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கழிவறைகளை உபயோகப்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படாது. இதுகுறித்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை பற்றியும் மக்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து வரும் 15–ந் தேதி சுதந்திர தினத்தன்று நடக்கும் கிராம சபை கூட்டங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.