கூடுதல் கட்டிடம் இல்லாததால் வகுப்பறையாக மாறிய அம்மன் கோவில்


கூடுதல் கட்டிடம் இல்லாததால் வகுப்பறையாக மாறிய அம்மன் கோவில்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:17 AM IST (Updated: 10 Aug 2017 4:17 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிக்கு கட்டிட வசதி இல்லாததால் 5 ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே வகுப்பறை செயல்படுகிறது.

செய்யாறு,

தமிழக அரசு கிராமங்களிலும் கல்வித்தரம் உயர வேண்டும் என்றும், மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டும் வாய்ப்புள்ள இடங்களில் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளியாகவும், உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தி வருகிறது. இதற்கான இடவசதியை ஏற்படுத்திக்கொடுக்க அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் செய்யாறு அருகே மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 5 ஆண்டுகளாகியும் கட்டிட வசதி செய்ய நடவடிக்கை எடுக்காததால் கோவிலே வகுப்பறையாக மாறியுள்ளது.

அது குறித்த விவரம் வருமாறு:–

செய்யாறு அடுத்த வடஇலுப்பை கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி 2001–ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நடுநிலைப்பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள மந்தவேளி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதியை பள்ளிக்கு வழங்கியதால் கோவிலை சுற்றி உயர்நிலைப்பள்ளிக்கு தேவையான வகுப்பறைகள் கட்டப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2012–ம் ஆண்டு இந்த பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு அருகாமையில் உள்ளதால் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம், முத்துவேடு உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட ஊர்களிலிருந்தும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்பேட்டை, சித்தனக்கால், பட்டரை, செய்யனூர் பகுதியிலிருந்தும் 650க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

தற்போதிய சூழ்நிலையில் தரம் உயர்த்திய நிலையில் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான ஆய்வக வசதியோ, போதிய வகுப்பறைகளோ இல்லை. இந்நிலையில் தற்போது இருக்கும் வகுப்பறைகளை மேல்நிலை பயிலும் பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து விட்டு மீதமுள்ள வகுப்பறைகளை உயர்நிலை பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால் இடப்பற்றாகுறையால் பள்ளி வளாகத்தில் உள்ள மந்தவேளி அம்மன் கோவிலே வகுப்பறையாக மாறியுள்ளது. வகுப்புகள் நடக்கும்போது அம்மனை வழிபட ஊர்பொதுமக்கள் வருவதால் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.

மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டிய நிலையில் தற்போது உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் 16 ஆண்டுகளாக காலிப்பணியிடமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பள்ளியில் மேல்நிலை கல்வியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு நடைபெறும் நிலையில், அந்ததந்த பாடத்திற்கான ஆய்வக வசதி ஏற்படுத்தபடாமல் உயர்நிலைப்பள்ளிக்கு ஓதுக்கீடு செய்த ஆய்வகத்திலேயே பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 மாணவர்கள் செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ளுகின்றனர்.

எனவே இந்த பகுதி கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டிடம், செய்முறை ஆய்வக கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் எனவும், 16 ஆண்டுகளாக காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிரப்பிட வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story