நெடுவாசல் போல் குடும்பத்துடன் போராடுவோம் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


நெடுவாசல் போல் குடும்பத்துடன் போராடுவோம் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

தனியார் விமான நிலைய திட்டத்துக்கு அனுமதி அளித்தால் நெடுவாசலில் நடந்தது போல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கலெக்டரிடம் கிராம மக்கள் தெரிவித்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு சட்டமன்ற தொகுதி பொன்பேத்தி, கிளியனூர், புத்தக்குடி, அண்டூர், வடமட்டம், வரிச்சிக்குடி உள்ளிட்ட கிராமங்களை இணைத்து பல நூறு ஏக்கரில் ஒரு நிறுவனம் சார்பில் விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக கிராமங்களில் உள்ள விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அப்போதைய புதுச்சேரி அரசும், கவர்னரும் தனியார் விமான நிலையம் அமைக்க தடையில்லா சான்று வழங்க மறுத்து விட்டனர்.

இந்தநிலையில் கடந்த 2012ம் ஆண்டு மீண்டும் அனுமதி பெற்று விட்டதாக கூறி விமான நிலைய திட்டத்தை அந்த நிறுவனம் தொடங்கியது. அப்போதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. நில ஆர்ஜிதப் பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்படாத நிலையில் மீண்டும் விமான நிலைய பணிகளை தொடங்க அந்த நிறுவனம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

அதாவது நேற்று முன்தினம் கட்டுமானப் பணிகளை தொடங்க வந்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விவசாயிகளும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதைத்தொடர்ந்து அவர்கள் திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் விமான நிலைய திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி விவசாயிகளும், கிராம மக்களும் மாவட்ட கலெக்டர் கேசவனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த கிராமங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் விமானநிலையம் அமைப்பதற்காக எங்களது நிலங்களை அழித்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.

எனவே, விளைநிலங்களை அழித்து விமானநிலையம் அமைக்க அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இதையும் மீறி அனுமதித்தால் தமிழகத்தில் கதிராமங்கலம் மற்றும் நெடுவாசல் பகுதிகளில் நடைபெற்று வருவது போன்று குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story