குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை 2 கிராம மக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை 2 கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Aug 2017 2:30 AM IST (Updated: 10 Aug 2017 6:02 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை 2 கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை 2 கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

காலிக் குடங்களுடன்...

கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் கிராமம் வடக்கு காலனியில் 80 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீரின்றி வறண்டதால், கடந்த 1½ மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. எனவே சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம் யூனியன் ஆணையாளர் சேவுக பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தோணுகால் வடக்கு காலனியில் நேரில் ஆய்வு செய்து, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கூசாலிபட்டி மேட்டுத்தெரு...

இந்த போராட்டம் முடிந்த சிறிது நேரத்தில் கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி மேட்டு தெரு பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே அங்கு கூடுதலாக 2 தெருக்குழாய்கள் அமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. பகத்சிங் மன்ற தலைவர் உத்தண்டராமன், சீதாராமன், வெள்ளத்தாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம் யூனியன் ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கூசாலிபட்டியில் நேரில் ஆய்வு செய்து, சீராக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story