தாழையூத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாழையூத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெல்லை,
புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாழையூத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டாஸ்மாக் கடைதேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. மேலும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே இருந்த டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக பல இடங்களில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. புதிய டாஸ்மாக் கடை அமைக்க சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தாழையூத்து ஏ.எப்.குடியிருப்பு அருகில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்தை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்இந்த நிலையில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சியின் மானூர் ஒன்றியம் சார்பில் தாழையூத்து மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மானூர் ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். பொறுப்பு குழு தலைவர் உஸ்மான்கான் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் செய்யது அலி, அபுபக்கர் அல்தாபி, ஜாபர், ரசூல், சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.