நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன.
நெல்லை,
நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன.
முதலாம் ஆண்டு வகுப்புகள்நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பு, 5 ஆண்டு சட்டப்படிப்புகளின் முதலாம் ஆண்டு சட்ட வகுப்புகள் நேற்று தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நெல்லை அரசு சட்டக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் ராமபிரான் ரஞ்சித்சிங் வரவேற்று பேசினார். மக்கள் கோர்ட்டு நீதிபதி வி.ராஜசேகரன் முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
உன்னதமான தொழில்அப்போது அவர் பேசும் போது, “கருவறை முதல் கல்லறை வரை சட்டம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதர்களும் அடிப்படை சட்டங்களை பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் அதிகம் தெரிந்து இருக்க வேண்டும். இந்த சட்டப்படிப்பை சந்தோசத்துடனும், ஈடுபாட்டுடனும் படிக்க வேண்டும். படிக்கும் போது, மூத்த வக்கீல்களின் அலுவலகங்களுக்கு சென்று சட்டம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வக்கீல் தொழில் மிகவும் உன்னதமான தொழில். தற்போது அந்த நிலையில் இருக்கிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த காலங்களில் இருந்ததை போல் வக்கீல் தொழிலுக்கு நல்ல மரியாதையை ஏற்படுத்தி தர வேண்டும்“ என்று கூறினார்.
லட்சியத்துடன்விழாவில் நீதிபதி ராமலிங்கம் பேசும் போது, “சட்டம் படிக்க வந்து இருக்கும் மாணவ–மாணவிகளை வரவேற்கிறேன். இங்கு பெரும்பாலும் தமிழ் வழி கல்வி படித்த மாணவர்கள் தான் வந்து இருக்கிறார்கள். நீங்கள் லட்சியத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது, சாதி, மொழி, அரசியலுக்கு இடம் கொடுக்க கூடாது“ என்றார்.
முன்னதாக நெல்லை அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர்கள் கிறிஸ்து ஜோதி, லட்சுமி விசுவநாதன், சவுந்தர்ராஜன், மேரி லிண்டா ஆகியோர் பேசினார்கள். முடிவில் உதவி பேராசிரியை சண்முகபிரியா நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.