ஆரல்வாய்மொழி அருகே கல்குவாரி பள்ளத்தை தூர்வார பொதுமக்கள் எதிர்ப்பு


ஆரல்வாய்மொழி அருகே கல்குவாரி பள்ளத்தை தூர்வார பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 10 Aug 2017 11:20 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே கல்குவாரி பள்ளத்தை தூர்வார பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள சகாயநகர் ஊராட்சிக்கு உள்பட்ட அனந்தபத்மநாபபுரத்தில் இருந்து புளியன்விளை செல்லும் சாலையில் ஒரு கல்குவாரி உள்ளது. தற்போது அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் சாக்கடை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் இணைந்து அந்த பள்ளத்தை மண் மூலம் நிரப்ப முயன்றனர். அப்போது, அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அத்துடன் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறினர்.

ஆனால், பல நாட்கள் கடந்தும் அதிகாரிகள் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த 1–ந் தேதி பொதுமக்கள் மீண்டும் வெளியூரில் இருந்து மண்ணை விலைக்கு வாங்கிவந்து பள்ளத்தில் கொட்டினர். அப்போதும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளின் கார்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர், பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கல்குவாரி பள்ளம் அருகே, அதிகாரிகள் தரப்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கல்குவாரி பள்ளம் தூர்வாரப்பட உள்ளதாக எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அந்த அறிவிப்பு பலகையை தூக்கி வீசினர்.

இதையடுத்து நேற்று ஊழியர்கள் பள்ளத்தை தூர் வாருவதற்காக சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பலர் அங்கு கூடினர். அவர்கள் கல்குவாரி பள்ளத்தை தூர்வார எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரோசிட்டா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்களிடம் பொதுமக்கள், இந்த பள்ளத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். இதை தூர்வாருவதால் மீண்டும் மழைநீர் தேங்கி நின்று சாக்கடை நீராக மாறி துர்நாற்றம் வீசும், என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) சப்–கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பொதுமக்கள் சார்பில் 5 பேர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வருமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story