அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசை வீடுகள் அகற்றம்


அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசை வீடுகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:00 AM IST (Updated: 11 Aug 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

வாழைத்தோட்டம் கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசை வீடுகள் அகற்றப்பட்டன. அந்த இடத்தை தங்களுக்கு வழங்கக்கோரி ஆதிவாசி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மசினகுடி,

மசினகுடி அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் வருவாய் துறைக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு அந்த கிராமத்தை சேர்ந்த இருளர் இன ஆதிவாசி மக்கள் ஆக்கிரமித்து 85 மண் குடிசை வீடுகளை அமைத்து அதில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் மசினகுடி பகுதியை சேர்ந்த காளன் என்பவர் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், சுந்தர் ஆகியோர் 2 வாரத்துக்குள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுபடி நேற்று குன்னூர் கோட்டாட்சியர் கீதாப் பிரியா தலைமையில் ஊட்டி தாசில்தார் மகேந்திரன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்றனர். நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், ராதாகிருஷ்ணன், கூடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசங்கர் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரன், பாஸ்கரன், வெங்கடேஷ் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அங்கு குடிசை அமைத்து குடியிருந்த ஆதிவாசி மக்களை அங்கிருந்து காலி செய்யும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அரசு நிலத்தை ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த குடிசை வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

அதனை தொடர்ந்து வாழைத்தோட்டம் பகுதி ஆதிவாசி மக்கள், சம்பந்தப்பட்ட இடத்தை தங்களுக்கு திருப்பி வழங்கக்கோரி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளித்தனர். சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட இடத்தை தர முடியாது. இதுகுறித்து அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கலெக்டர் தெரிவித்தார்.

Next Story