100 நாள் வேலையை உயர்த்தி வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் அலுவலகத்தை முற்றுகை


100 நாள் வேலையை உயர்த்தி வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் அலுவலகத்தை முற்றுகை
x
தினத்தந்தி 11 Aug 2017 4:30 AM IST (Updated: 11 Aug 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலையை உயர்த்தி வழங்க கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எருமப்பட்டி,

எருமப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். எருமப்பட்டி காந்தி சிலையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க சேந்தமங்கலம் தாலுகா செயலாளர் சதாசிவம் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பெண் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் பேரூராட்சியில் வசிக்கும் திட்ட தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு கூலியை ரூ.300 ஆக வழங்க வேண்டும், ஏரி, குளங்களை தூர்வார போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் திடீரென பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் சங்க நிர்வாகிகள் பேரூராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story