மணல் குவாரிக்கு பாதை அமைத்த எந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்


மணல் குவாரிக்கு பாதை அமைத்த எந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:30 AM IST (Updated: 11 Aug 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

மங்கலக்குடி அருகே விருசுழி ஆற்றில் மணல் குவாரிக்கு பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி. எந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா கட்டவிளாகம் அருகே உள்ள விருசுழி ஆற்றில் மணல் குவாரி அமைக்க ஜே.சி.பி. எந்திரங்கள் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டன. இதற்கு கட்ட வளாகம், கூகுடி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அந்த எந்திரங்களை சிறை பிடித்து பணிகளை தொடர விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மணல் குவாரி அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை வழங்கி வலியுறுத்தினர். அதன்பின் திருவாடானை தாசில்தார் தாமசை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கட்டவிளாகம், கூகுடி வருவாய் கிராமங்களில் எங்களது விளைநிலங்கள் அதிகஅளவில் உள்ளது. ஏற்கனவே கட்டவிளாகம் பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டது. ஆனால் அதில் அரசின் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டுஉள்ளதால் எங்கள் விவசாய நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதுடன் இப்பகுதியில் நிலத்தடி நீரும், நீர் ஆதாரங்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுஉள்ளன. இந்நிலையில் மீண்டும் கூகுடி வருவாய் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் எங்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்படும்.

இதேநிலை தொடர்ந்தால் கட்டவிளாகம் வருவாய் கிராமத்தில் உள்ள அச்சங்காடு, ஆற்றுக்காடு பகுதியில் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் நீர் ஆதாரம் இன்றி முற்றிலும் வறண்டு போகும் அபாயம் உள்ளது. இதேபோல் கூகுடி வருவாய் கிராமத்தில் உள்ள சம்பிரியான் காட்டில் உள்ள சுமார்50 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும். மேலும் வறண்ட காலங்களில் இந்த விருசுழி ஆற்றில் தான் ஊற்று தோண்டி விவசாயத்தை காப்பாற்றி வந்தோம். கடந்த 50ஆண்டுகளாக இந்த நீர் ஆதாரம் தான் எங்களின் தாகம் தீர்த்து வருகிறது. இங்கு மணல் குவாரி அமைத்தால் ஆற்றில் வெள்ளம் வந்தால் கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து அழித்துவிடும்.

இதனால் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளோம். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளும் கட்டவிளாகம், கூகுடி வருவாய் கிராமங்களுக்கு இடையே விருசுழி ஆற்றில் அமைக்கப்படும் மணல் குவாரியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து எங்களின் விவசாய நிலங்களையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story