இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு


இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2017 4:30 AM IST (Updated: 11 Aug 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடித்துச்செல்லப்பட்டனர்.

ராமேசுவரம்,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இவ்வாறு இலங்கை சிறைகளில் அடைக்கப்படும் மீனவர்கள், மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இலங்கை சிறைகளில் இருந்து 77 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பினர். அவர்கள் விடுதலையான ஓரிரு நாளிலேயே (கடந்த 8-ந் தேதி) புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.

இந்த சிறைபிடிப்பு நேற்றுமுன்தினமும் தொடர்ந்தது. ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 262 படகுகளில் சுமார் 2,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் ரோந்து வந்து தமிழக மீனவர்களை எச்சரித்தனர். இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றபோது சில படகுகளில் இறங்கிய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை தாக்கி, மீன்பிடி சாதனங்களை கடலில் வீசி எறிந்தனர்.

கார்த்தி என்பவருக்கு சொந்தமான படகின்மீது ரோந்து கப்பலால் மோதினர். இதில் அந்த படகு சேதமடைந்தது.

தொடர்ந்து ராமேசுவரத்தை சேர்ந்த நாகதாஸ், பாண்டி, ராமு ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகளையும், அவற்றில் இருந்த களஞ்சியராஜ், சோலை, ராஜா, காமராஜ், ராமு, கார்மேகம், முனியாண்டி, பலவேசம், பாண்டி, ஆரோக்கிய அந்தோணி சந்தியா, தாசன், செல்லையா ஆகிய 12 மீனவர்களையும் சிறைபிடித்து ஊர்க்காவல்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் 12 மீனவர்களும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வருகிற 23-ந்தேதி வரை அவர்களை காவலில் வைக்க உத்தர விட்டார். இதையடுத்து 12 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story