17 கிளை வாய்க்கால்களில் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


17 கிளை வாய்க்கால்களில் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2017 4:30 AM IST (Updated: 11 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

உய்ய கொண்டான் உள்ளிட்ட 17 கிளை வாய்க்கால்களிலும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் காவிரியின் 17 கிளை வாய்க்கால்கள் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படாததால் தற்போது இந்த வாய்க்கால் களில் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் உள்ளன.

இதில் உய்ய கொண்டான், கட்டளை வாய்க்கால்கள் திருச்சி மாவட்டத்தில் பாசனம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள பொதுப்பணித்துறையின் ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு விவசாயிகள் நேற்று திரண்டு வந்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் செயற்பொறியாளர் கணேசனிடம் தனித்தனியாக மனுக்களை கொடுத்தனர்.

அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:-

வரலாறு காணாத வறட்சியால் திருச்சி மாவட்டத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் திருச்சியை நெருங்கி வந்து விட்டதால் உய்ய கொண்டான், கட்டளை வாய்கால்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தங்கு தடையின்றி வந்து சேர வசதியாக மாயனூர் கதவணைக்கும், கல்லணைக்கும் இடையே மணல் குவாரிகளில் காவிரி ஆற்றுக்குள் லாரிகள் சென்று வருவதற்காக போடப்பட்ட வழித்தடங்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

Related Tags :
Next Story