பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய மாநகர பஸ், துணி கடைக்குள் புகுந்தது ஓட்டல் ஊழியர் படுகாயம்
பூந்தமல்லி அருகே தாறுமாறாக ஓடிய மாநகர பஸ், சாலையோரம் உள்ள ஓட்டலின் முன்பகுதியை இடித்துக்கொண்டு அருகில் உள்ள துணி கடைக்குள் புகுந்தது. இதில் ஓட்டல் ஊழியர் படுகாயம் அடைந்தார்.
பூந்தமல்லி,
சென்னை தியாகராயநகரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி நேற்று அதிகாலை மாநகர பஸ்(தடம் எண் 544) சென்று கொண்டு இருந்தது. பஸ்சை டிரைவர் ஏழுமலை(வயது 35) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ராஜேந்திரன்(37) இருந்தார். காலை நேரம் என்பதால் பஸ்சில் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர்.
பூந்தமல்லி டிரங்க் ரோடு கரையான்சாவடி அருகே பஸ் வேகமாக வந்து கொண்டு இருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடியது. சாலையோரம் இருந்த ஓட்டலின் முன்பகுதியை இடித்துக்கொண்டு அருகில் உள்ள துணி கடைக்குள் புகுந்த மாநகர பஸ், அருகில் உள்ள வீட்டின் சுவரில் மோதி நின்றது.
இதில் மாநகர பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ் மோதியதில் துணி கடை இடிந்து தரை மட்டமானது. விபத்து நடந்த உடன் மாநகர பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த விபத்தில் ஓட்டல் முன் நின்று கொண்டு இருந்த ஓட்டல் ஊழியர் அய்யப்பன்(20) படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பஸ்சில் இருந்த ஒரு பயணி மட்டும் லேசான காயம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரவனம் தலைமையிலான போலீசார், விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான ஏழுமலையை பிடித்து விசாரித்து வருகின்றனர்.