கல்பாக்கம் அருகே அணுமின் நிலைய ஊழியர் அடித்துக்கொலை
கல்பாக்கத்தை அடுத்த விட்டிலாபுரம் ஊராட்சி இளையனார்குப்பம் மதுக்கடையின் முன்பு நேற்று காலை தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆண் பிணம் கிடந்தது.
கல்பாக்கம்,
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு எட்வர்ட், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அறிவியல் உதவியாளராக பணியாற்றி வரும் ஆண்ட்ருஸ் ராஜையா (வயது 52) என்பதும், கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இவரது மனைவி மல்லிகா ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் என்பதும், இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அவரது செல்போன் எண்ணை வைத்து அவர் கடைசியாக யாருடன் பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.