ஆன்–லைன் மோசடியில் பணத்தை இழந்தவருக்கு ரூ.14 லட்சத்தை திருப்பி கொடுக்க வங்கிக்கு உத்தரவு


ஆன்–லைன் மோசடியில் பணத்தை இழந்தவருக்கு ரூ.14 லட்சத்தை திருப்பி கொடுக்க வங்கிக்கு உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2017 4:10 AM IST (Updated: 11 Aug 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

ஆன்–லைன் மோசடியில் பணத்தை இழந்தவருக்கு ரூ.14 லட்சத்தை திருப்பி கொடுக்க வங்கிக்கு மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்தவர் தாமஸ். இவர் ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி 8 மற்றும் 9–ந்தேதி ஆகிய 2 நாட்களில் இவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.14 லட்சம் சைபர் கிரைம் திருடர்களால் அபேஸ் செய்யப்பட்டது. தாமசின் வங்கிக்கணக்கில் இருந்த பணம் 20–க்கும் மேற்பட்ட ஆன்–லைன் பரிமாற்றங்கள் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பட்டுள்ளது.

மறுநாள் தாமஸ் வங்கிக்கு சென்று விசாரித்த போது தான் அவரது வங்கிக்கணக்கில் இருந்த பணம் சைபர் கிரைம் திருடர்கள் மூலம் அபேஸ் செய்யப்பட்டது தெரியவந்தது.

தாமஸ் தனது கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யப்பட்டதற்கு தனியார் வங்கி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டினார். மேலும் இழப்பீடு கேட்டு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஆன்–லைனில் பணப்பரிமாற்றங்கள் நடந்தபோதும் அதுகுறித்த தகவலை இ–மெயில் அல்லது குறுந்தகவல் மூலமாக வங்கி நிர்வாகம் தாமசுக்கு தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்தது.

எனவே பணியில் அலட்சியமாக இருந்த வங்கி நிர்வாகம் ஒரு மாதத்திற்குள் ரூ.14 லட்சத்தை தாமசுக்கு இழப்பீடாக வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


Next Story