டெல்லியில் நடந்தது பிரதமர் மோடியுடன் தேவேகவுடா சந்திப்பு


டெல்லியில் நடந்தது பிரதமர் மோடியுடன் தேவேகவுடா சந்திப்பு
x
தினத்தந்தி 11 Aug 2017 4:44 AM IST (Updated: 11 Aug 2017 4:43 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேவேகவுடா நேற்று திடீரென்று சந்தித்து பேசினார்.

பெங்களூரு,

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தேவேகவுடா நேற்று திடீரென்று சந்தித்து பேசினார். அப்போது மகதாயி நதிநீர் பிரச்சினையில் தலையிடும்படி பிரதமருக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா டெல்லி சென்றுள்ளார். அங்கு நேற்று காலையில் பிரதமர் நரேந்திர மோடியை தேவேகவுடா திடீரென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரை மணிநேரத்திற்கும் மேலாக நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ள பாகுபலி கோவிலில் அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் மகாமஸ்தகாபிஷேகம் நடப்பதாகவும், இதற்காக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரி தேவேகவுடா மனு கொடுத்தார்.

அந்த மனுவை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டதுடன், மகாமஸ்தகாபிஷேகத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் கர்நாடக அரசியல் குறித்து பிரதமரிடம் தேவேகவுடா பேசினார்.

மேலும் கர்நாடகத்தில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு இருப்பதாகவும், அதனை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கும்படியும், அதே நேரத்தில் ஹாசன் மாவட்டத்தில் ஐ.ஐ.டி. தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தேவேகவுடா கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

அதே நேரத்தில் வடகர்நாடகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுவதால், கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களுக்கு இடையே உள்ள மகதாயி நதிநீர் பிரச்சினையில் தலையிட்டு, அதற்கு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியிடம் தேவேகவுடா கோரிக்கை விடுத்தார். பின்னர் அங்கிருந்து தேவேகவுடா புறப்பட்டு சென்றார்.


Next Story