எனது வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
வருமான வரி சோதனை விவகாரம் தொடர்பாக எனது வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என்று மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எனது வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள். ஆனால் எனது வீட்டில் இருந்து எடுத்து சென்ற பணம், நகைகள் என எது பற்றியும் இதுவரை எனக்கு தெரியாது. நான் நிறைய தொழில்களை செய்து வருகிறேன். பல நிறுவனங்களின் பங்குதாரராக உள்ளேன். எனது வங்கி கணக்குகள் முழுவதையும் வருமான வரித்துறையினர் முடக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது முற்றிலும் தவறானது.நான் செய்யும் தொழில் தொடர்பாக தினமும் என்னென்ன வங்கி கணக்குகள் மூலம் பண பரிமாற்றங்கள் நடக்க வேண்டுமோ, அதுதொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே வருமான வரித்துறையினர் எனது வங்கி கணக்குகளை முடக்கவில்லை. வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கி வைத்திருப்பதாகவும், சொத்துக்களை ஜப்தி செய்துவைத்திருப்பதாகவும் வீண் வதந்திகள் பரப்பப்படுகின்றன.
வருமான வரி சோதனை தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு நான் ஆஜராகியுள்ளேன். என்னிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி அதிகாரிகள் எந்தவொரு நோட்டீசும் அனுப்பி வைக்கவில்லை. நானே வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று சில ஆவணங்களின் தகவல்களை கேட்டுள்ளேன்.பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு செல்வது, அவரது விருப்பம். தற்போது அரசியல்வாதிகள் அனைவரும் மடத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். நான் கூட சித்தகங்கா மடத்திற்கு செல்வேன். ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு அமித்ஷா செல்வதை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்