புதுவையில் தொழில் தொடங்க யாரும் முன்வரவில்லை கவர்னர் மீது அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு


புதுவையில் தொழில் தொடங்க யாரும் முன்வரவில்லை கவர்னர் மீது அமைச்சர் கந்தசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Aug 2017 5:01 AM IST (Updated: 11 Aug 2017 5:01 AM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டங்களை நிறுத்துவதிலேயே குறியாக இருந்து வருகிறார். கவர்னரின் செயல்பாட்டால் புதுவையில் யாரும் தொழில் தொடங்க முன்வரவில்லை என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்ய சென்னை துறைமுக கழகத்துடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதையொட்டி புதுவை துறைமுகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஜூன் மாதம் முதல் புதுவையில் துறைமுகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தூர்வாரும் பணிகள் முடிவடையாததால் துறைமுகத்தை இயக்குவது தாமதமாகி வருகிறது. இந்தநிலையில் துறைமுக திட்டப்பணிகள் குறித்து அரசுக்கு கவர்னர் கிரண்பெடி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இந்தநிலையில் புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி முட்டுக்கடையாக இருந்து வருகிறார் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

கந்தசாமி ஆய்வு

இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமி நேற்று காலை துறைமுக பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் துறைமுகத்தில் இருந்து மரப்பாலம் தேங்காய்திட்டு வழியாக மரப்பாலம் மூப்பனார் சிலையை சென்றடையும் வகையில் சாலை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, அன்பழகன், துறைமுக செயலாளர் பார்த்திபன், செயற்பொறியாளர் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–

சுற்றுச்சூழல் பாதிக்காது

துறைமுக விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறி வருகிறார். துறைமுகத்தில் தூர்வாரும் பணி என்பது வழக்கமாக மேற்கொள்ளப்படும் பணிதான். 3 லட்சம் கியூபிக் மீட்டர் மண் தூர்வாரி, துறைமுகத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதுச்சேரி அரசுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி 50 சதவீத செலவை சென்னை துறைமுகமே ஏற்கும்.

இதற்காக சென்னை துறைமுகம் ஏற்கனவே ஒரு துணை தலைமைப் பொறியாளர் அதிகாரியை நியமித்துள்ளது. இதர தேவையான பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அந்த திட்டத்தை தொடங்கிய உடன் வெளிச்சந்தை மூலம் தேவையான அளவு நியமிக்கப்படுவர்.

புதுச்சேரி துறைமுகத்திற்கு சரக்கு கப்பல்கள், மீன்பிடி படகுகள் சென்றுவரும் வகையில் போக்குவரத்து கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வாரம் ஒருமுறை அல்லது இரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே சரக்கு கப்பல் வரும். அதுவும் கார், பிற எந்திர டயர்கள் ஏற்றி வரும்போது மூடிய கண்டெய்னர் மூலமே ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்காது.

கவர்னர் நிராகரிப்பு

புதுச்சேரி துறைமுகம் வழியாக சரக்கு கப்பல்கள் வந்து செல்வதால் 200 கிலோ மீட்டருக்கு மேல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் சரக்குகள் இரவு 10 மணிக்குமேல் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

புதுவையில் துறைமுகத்துறை இயக்குனர் பதவியை நியமிக்க ஏற்கனவே கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் யாரும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் துறைமுகத்துறை இயக்குனர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். அதை கவர்னர் நிராகரித்துவிட்டார்.

முரணாக பேசி வருகிறார்

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையால் செயல்படுத்தப்படும் கடற்கரை மறு சீரமைப்பு திட்டத்தையும், துறைமுகத்துறை திட்டத்தையும் தவறாக இணைத்து மக்களிடம் குறை சொல்லி வருகிறார். பல்வேறு வகையில் கவர்னர் கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டு, உரிய ஊழியர்களை போடவில்லை என சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

பைப் லைன் மூலமாக கடற்கரையில் மணலை கொட்டுவதால் எந்தவகையில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்? கவர்னர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார். தனியார் போக்குவரத்து ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புகிறார்.

மத்திய அரசின் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் மூலமாக இந்த திட்டத்தினை செயல்படுத்த தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுத்தார். துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. துறைமுகத்தை ஆழப்படுத்த டிரட்ஜிங் கார்ப்ரே‌ஷன் ஆப் இந்தியா நிறுவனத்தை கவர்னர் தான் கொண்டுவந்தார்.

தொழில் தொடங்க முன்வரவில்லை

துறைமுக திட்டத்திற்கான எதிர்ப்பு தொடர்ந்தால் அனைத்து மீனவர்களும் கவர்னருக்கு எதிராக திரும்ப நேரிடும். அரசின் திட்டங்களை நிறுத்துவதிலேயே கவர்னர் ஆர்வமாக உள்ளார். அவரது செயல்பாட்டால் புதுச்சேரியில் யாரும் தொழில் தொடங்க முன்வரவில்லை. பொதுவாக கவர்னர் புதுச்சேரியின் எதிரியாகவே செயல்பட்டு வருகிறார். புதுவையில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார பொதுப்பணித் துறையுடன் இணைந்து ஆய்வு செய்துள்ளோம். போர்க்கால அடிப்படையில் இதற்கான பணிகள் நடைபெறும்.

உண்மையிலேயே கவர்னருக்கு அக்கறை இருந்தால் விவசாய கடன் தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீதம் கல்வி நிதி, முதியோர் பென்சன், இலவச அரிசி போன்ற திட்டங்களை கிடப்பில் போட முன்வருவாரா? முழுமையான முயற்சி எடுத்து துறைமுகத்தையும், விமான போக்குவரத்து திட்டத்தையும் செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story