விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சு


விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 11 Aug 2017 5:00 AM IST (Updated: 11 Aug 2017 5:09 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருபுவனை,

புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சியின் வில்லியனூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மதகடிப்பட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் தனுசு, சதாசிவம், செயலாளர்கள் நாகராஜன், சாய் சரவணன், மாநில அமைப்பு சாரா துணைத்தலைவர் புகழேந்தி, பிரசார அணித்தலைவர் சுந்தரமூர்த்தி, மாநில பயிற்சி அணியின் தலைவர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தொகுதி தலைவர் பழனிசாமி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர்கள் தங்க விக்கிரமன், ரவிச்சந்திரன், பொறுப்பாளர் அருள்முருகன், நியமன எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

ஆட்சி மாற்றம் ஏற்படும்

இந்த கூட்டத்தில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்துக்கு கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருகிறார். அவருடைய வருகை பல மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் தற்போதைய ஆட்சியும் மாறும். புதுச்சேரியில் விரைவில் பா.ஜனதா ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் அனைத்து நலத்திட்டங்களையும், கிராமம்தோறும் சென்று சேர்ப்பது புதுச்சேரி மாநில பா.ஜனதாவின் முதல் சேவையாக இருக்க வேண்டும்.

புதுச்சேரி காங்கிரஸ் அரசில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரியில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் அது ஆட்சி மாற்றம். இதற்காக புதுச்சேரி மாநில பா.ஜனதாவினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
பாரத பிரதமர் முதல் ஜனாதிபதி வரை அனைவரும் பா.ஜனதாவின் கடைநிலை தொண்டர்கள். தொண்டர்கள்தான் இந்த கட்சியில் மிகப்பெரிய பதவியில் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

தடுப்பணைகள் கட்ட வேண்டும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*இந்தியா ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி என அறிவித்து மக்களின் வரிப்பணத்தை மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வித்திட்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது.

*புதுச்சேரி வரலாற்றில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை பிரதமர் மோடியின் ஆசியோடு நியமித்த கட்சியின் தலைவர் அமித்ஷா அவர்களுக்கு புதுச்சேரி பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வது.

*நிலத்தடி நீர்் அதிகரித்து, விவசாயம் வளம் பெற செட்டிப்பட்டு, செல்லிப்பட்டு, கூடப்பாக்கம் கிராமபுற விவசாய நிலங்கள் பயன்பெற தடுப்பு அணைகள் உடனடியாக கட்ட வேண்டும்.

*லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலையின் நிர்வாகம் விவசாயிகளின் நிலுவை தொகையினை விரைவாக வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளை பா.ஜனதா மாவட்ட செயலாளர்கள் திருவேங்கடம், ரவி, புருஷோத்தமன், அத்துழாய் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் கட்சியின் தொகுதி தலைவர் பழனிசாமி, கலியமூர்த்தி, பரந்தாமன், பாலபாஸ்கர் அற்புதராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story