செண்பகத்தோப்பு அணையை எம்.எல்.ஏ. ஆய்வு சாலை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை


செண்பகத்தோப்பு அணையை எம்.எல்.ஏ. ஆய்வு சாலை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Aug 2017 5:10 AM IST (Updated: 11 Aug 2017 5:10 AM IST)
t-max-icont-min-icon

செண்பகத்தோப்பு அணையை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் அவரது காரை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் கமண்டல நதி குறுக்கே ரூ.44 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செண்பகத்தோப்பு அணை இன்னும் விவசாய பயன்பாட்டுக்கு வராமல், ‌ஷட்டர் அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் கடந்த 10 ஆண்களுக்கு மேலாக தண்ணீரை சேமிக்க முடியாமல் உள்ளது. இந்த நிலையில் செண்பகத்தோப்பு அணையால் பயன்பெறும் விவசாயிகள் சார்பில், மறுசீரமைப்பு செய்து அணையை விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணைப்பகுதியில் தண்ணீர் வீணாக்காமல் சேமிக்க ‌ஷட்டர் சீரமைப்பு பணிக்காக ரூ.9 கோடியே 80 லட்சம் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த அணையின் தற்போதைய நிலவரம் குறித்து நேற்று காலை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது போளூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் கே.எஸ்.மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, முன்னாள் கவுன்சிலர் துரை, போளூர் ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ரகு ஆகியோர் உடனிருந்தனர்.

முற்றுகை

முன்னதாக செண்பகத்தோப்பு அணைக்கு செல்லும் வழியில் உள்ள பெருமாள்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு மையத்தை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

பின்னர் அங்கிருந்து சென்ற அவரது காரை பெருமாள்பேட்டை ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்த கீழ்செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் செண்பகத்தோப்பு அணையில் இருந்து செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று முற்றுகையிட்டனர்.

அப்போது பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story