சுதந்திரதின கொண்டாட்ட ஆலோசனை கூட்டம்
புதுவையில் சுதந்திரதின விழாவை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா தலைமையில் நடந்தது.
புதுச்சேரி,
வருகிற 15–ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாட இருப்பதையொட்டி புதுவை மாநிலத்திற்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் சுதந்திரதின விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை செயலாளர் மனோஜ் பரிதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு செயலாளர்கள் ஜவகர், மிகிர்வர்தன், பார்த்திபன், சுந்தரவடிவேலு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி, சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், நகராட்சி ஆணையர்கள் கணேசன், ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள்கூட்டத்தில், புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகள் கடலில் இறங்கி குளிக்கின்றனர். அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் கண்காணிப்பது, பழைய சாராய ஆலை பகுதியில் பார்க்கிங் வசதி செய்வது, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுப்பது, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வாண வேடிக்கை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.