வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் ஏரிகள் நிரம்பின
தமிழக – ஆந்திர பகுதியில் மழை பெய்வதால் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வாணியம்பாடி,
தமிழக – ஆந்திர பகுதியில் மழை பெய்வதால் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பாலாறு நுழையும் இடமான புல்லூரில் ஆந்திர அரசு தடுப்பணையை கட்டியதால் பாலாற்றில் தண்ணீர் வருவது தடைபட்டது. மேலும் தற்போது கடந்த ஆண்டு அணையின் உயரத்தை பல அடி உயர்த்தி கட்டியதால் தண்ணீர் கிடைக்காத நிலையில் தமிழக விவசாயிகள் பாதிப்படைந்தனர்.இந்த நிலையில் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதி மற்றும் ஆந்திர மாநில வனபகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புல்லூர் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. இதனால் பாலாற்றில் புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், அம்பலூர், கொடையாஞ்சி பகுதி வரை பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரியும், கலட்டாறு ஏரியும் நிரம்பி வழிகிறது. இதில் வழியும் தண்ணீரும் பாலாற்றில் கலப்பதால் அதிக அளவில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றி விவசாயத்தை நம்பி பல கிராமங்கள் உள்ளன. கிராமங்களுக்கு பாசனத்திற்காக பாலாற்றில் இருந்து கால்வாய்கள் செல்கிறது. இந்த நிலையில் பாலாற்றில் பல இடங்களில் 50 அடிக்கும் மேலாக பெரும் பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டுள்ளதால் அவைகள் நிரம்பி ஆம்பூர், பள்ளிகொண்டா வழியாக வேலூருக்கு பாலாற்றில் தண்ணீர் வருவது அரிதான நிலை ஏற்பட்டுள்ளது.கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரததால் பாலாற்றில் வெள்ளம் வந்தும் நீர்கால்வாய்கள் வழியாக விவசாய நிலங்களுக்கு வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பு பாசன கால்வாய்கள் தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.