பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் பாதிப்புபாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேலப்பாவூர், திருச்சிற்றம்பலம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, மேலப்பாட்டாக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் பஸ்களில் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். அரசு வழங்கி உள்ள இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள் அதன்மூலம் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலையில் பள்ளிக்கு வருவதற்கு போதிய பஸ்கள் இருந்த போதிலும் மாலையில் சரிவர பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
பஸ் சிறைபிடிப்புஇந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் மேலப்பாவூரில் இருந்து சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி வழியாக தென்காசிக்கு செல்லும் அரசு பஸ் புறப்பட தயாரானது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் அந்த பஸ்சை வழிமறித்து, பள்ளி முடிவதற்குள் ஏன் பஸ்சை எடுக்கிறீர்கள்? என்று வாக்குவாதம் செய்தனர். அதற்குள் பள்ளிக்கூடம் முடிந்து மாணவ–மாணவிகள் அங்கு வந்தனர். அவர்களும் அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த பஸ் மாலை 4.10 மணிக்கு மேலப்பாவூரில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் பள்ளி முடிந்து நாங்கள் ஊர்களுக்கு செல்ல வசதியாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த பஸ் மாலை 4 மணிக்கே புறப்பட்டு சென்று விடுகிறது. இதனால் நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து ஊர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தோம். அவர்களும் மாலை 4.10 மணிக்கு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் அதற்கு முன்னதாக பஸ்சை எடுத்ததால் போராட்டம் நடத்தி உள்ளோம்‘ என்றனர்.
இதையடுத்து மாணவ–மாணவிகளை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் புறப்பட்டு சென்றது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.