கயத்தாறு அருகே பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் பேரன் வெட்டிக் கொலை
கயத்தாறு அருகே பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பேரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பேரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக வெறிச்செயலில் ஈடுபட்ட தாய்மாமன் மகன்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்ய மறுத்ததால்...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். விவசாயி. இவருடைய மனைவி நெல்லை வடிவு. இவர்களுக்கு அண்ணாமலை, சந்தனம் (31) ஆகிய 2 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். சந்தனம் கூலி வேலை செய்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகய்யா. இவரும், நெல்லை வடிவும் அண்ணன்– தங்கை ஆவர். பரமசிவத்தின் மகளை, முருகய்யாவின் மகன் சீனிபாண்டி திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணாமலை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சீனிபாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அண்ணாமலை ஜெயிலில் உள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்தது.
இறுதி ஊர்வலத்தில்...
சீனிபாண்டியின் கொலைக்கு பழிக்குப்பழியாக, பரமசிவத்தின் குடும்பத்தில் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று முருகய்யாவின் மகன்கள் தக்க தருணத்தை எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் முருகய்யாவின் தாயாரான சுமார் 120 வயதுடைய சொக்கம்மாள் நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலையில் நடந்தது.
சொக்கம்மாளின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று, அங்குள்ள மயானத்தில் தகனம் செய்தனர். இறுதி ஊர்வலத்தில் சந்தனம் கலந்து கொண்டார். அவர் மயானம் வரையிலும் சென்றார்.
கொலை
சொக்கம்மாளின் உடலுக்கு தீ வைத்த சில வினாடிகளில் முருகய்யாவின் மகன்களான கண்ணன், குமார், செல்வராஜ் உள்ளிட்டவர்கள் சந்தனத்தை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இதனால் இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்– இன்ஸ்பெக்டர்கள் மணி, முத்துகிருஷ்ணன் (பயிற்சி), ஆரோக்கிய பெனிட் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சந்தனத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேரிடம் விசாரணை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்ணன், குமார், செல்வராஜ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தலைமறைவான மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சந்தனத்தின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பேரனை தாய்மாமன் மகன்கள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.