விழுப்புரத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
விழுப்புரத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
விழுப்புரம்,
நாட்டின் 71–வது சுதந்திர தின விழா வருகிற 15–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி விழுப்புரத்தில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, கோட்டாட்சியர் சரஸ்வதி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சங்கர், வெள்ளைச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசுகையில், சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செய்திட வேண்டும், சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிப்பதோடு அவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும், கல்வித்துறையினர் மாணவர்கள் மூலம் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், அரசுத்துறைகளில் சிறந்து பணியாற்றிய அலுவலர்களை தேர்வு செய்து பரிசு வழங்க வேண்டும். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்.