டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை காங்கிரஸ் கோரிக்கை


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை காங்கிரஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2017 3:30 AM IST (Updated: 12 Aug 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதார துறையினருக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் இணைச் செயலாளர் அப்பாவு மற்றும் நிர்வாகிகள் மாவட்ட சுகாதார துறையினருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

மாவட்டத்தில் சமீப காலமாக பெய்துவரும் மழையால் நோய் தொற்று ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. மேலும் மாவட்டத்தில் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மழைக்காலங்களில் சாலை ஓரம் தேங்கும் தண்ணீரால் தான் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவுகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் முகாம்கள் நடத்தி நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்கி டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு காரணங்களை அரசு ஆராய வேண்டும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் வருகையையும், நேரத்தையும் நீட்டிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்துகளுடன் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் முழு நேர பணியை மேற்கொள்ளும் அளவிற்கு சுகாதார துறையினர் டெங்கு தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும்.

சாலை ஓரங்களில் மழைநீர் தேங்காதவாறு பள்ளங்களை தற்காலிகமாக சரிசெய்யும் வகையில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுவீடாக சென்று கொசு மருந்து அடிப்பது, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

மேலும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா என்பதை அரசு ஆஸ்பத்திரி பதிவேடுகளின் மூலம் மாவட்ட சுகாதார இயக்கம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story