ராஜபாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் சூறையாடினர்


ராஜபாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் சூறையாடினர்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:15 AM IST (Updated: 12 Aug 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் சூறையாடினர். இதில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் உடைக்கப்பட்டுள்ளதாக கடை மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, நேற்று முன்தினம் சங்கரபாண்டியபுரம் அடுத்துள்ள கிழவன் கோவில் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. கடை அமைந்துள்ள பகுதியை சுற்றி வீடுகள், மருத்துவத்துணி சுத்திகரிக்கும் ஆலைகள், குறவர் காலனி, இலங்கை அகதிகள் முகாம் என பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக குறவர் காலனி மற்றும் அகதிகள் முகாமிற்கு இந்த பாதையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பாதையில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு மது அருந்திய சிலர் அந்த வழியாக வந்த ஒரு சிறுவனிடம் தகராறில் ஈடுபட்டதோடு கல்லால் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் நேற்று காலை டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வராததை அடுத்து, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பீர் உள்ளிட்ட மதுபான பாட்டில்களை பெட்டியுடன் எடுத்து வந்து கடை வாசலில் போட்டு உடைத்தனர். சில பெண்கள் கம்புகளை கொண்டும், சுவற்றில் மதுபாட்டில்கள் வீசியும் தங்களது ஆத்திரம் தீரும் வரை உடைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் மதுவின் துர்நாற்றம் வீசியது. சிறுவர்கள் சிலரும் பொதுமக்களுடன் இணைந்து மது பாட்டில்களை உடைத்தனர்.

இச்சம்பவத்தை பயன்படுத்தி அப்பகுதி வழியாக சென்ற ஆண்கள் உடையாத மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் அந்த மதுபாட்டில்களையும் பறித்துஉடைத்ததால், அப்பகுதி களேபரமானது. மதுபாட்டில்கள் அனைத்தையும் உடைத்த பின் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். பின்னர் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜேசு, மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். புதிய கடை என்பதால் இருப்பு வைக்கப்பட்டு இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டதாக கடையின் மேற்பார்வையாளர் தெரிவித்தார்.


Next Story