இரோம் சர்மிளாவின் திருமணத்துக்கு எதிர்ப்பு: தே.மு.தி.க. பிரமுகரின் மனு நிராகரிப்பு
மணிப்பூர் மாநில சமூக போராளி இரோம் சர்மிளாவின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தே.மு.தி.க. பிரமுகரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதுதொடர்பாக கொடைக்கானல் சார்பதிவாளர் மூலம் தே.மு.தி.க. பிரமுகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
கொடைக்கானல்,
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் சமூக போராளி இரோம் சர்மிளா. இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வந்து தங்கினார். இவர் அங்கு தனது காதலரான தேஸ்மன்ட் கொட்டின் என்பவரை திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். அதற்கு அனுமதிக்ககோரி, கடந்த மாதம் 13–ந் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த திருமணத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பேத்துப்பாறை கிராமத்தை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் மகேந்திரன் என்பவர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதையடுத்து கடந்த மாதம் 28–ந் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் மகேந்திரனிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே இரோம் சர்மிளாவின் திருமணத்துக்கு சமூக அமைப்புகளும் எதிர்ப்பு, ஆதரவு தெரிவித்து சார்பதிவாளர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்து வருகின்றனர்.
இதில் நேற்று முன்தினம் பழனிமலை பழங்குடியினர் கூட்டமைப்பு, கோடைமலை அம்பேத்கர் அமைப்பு, கட்டுமான நல உரிமைச்சங்கம் ஆகியவை சார்பில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ., சார்பதிவாளர் ஆகியோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.
அந்த மனுக்களில், ஆதிவாசிகள், பழங்குடியின மக்களுக்காக 16 ஆண்டுகள் காந்திய வழியில் போராடிய இரும்பு பெண்மணியான இரோம் சர்மிளாவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். அவருடைய திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் யாரும், யாரையும் திருமணம் செய்ய உரிமை உள்ளது. எனவே அவருடைய திருமணத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று சார்பதிவாளர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. பிரமுகர் மகேந்திரனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனித் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள உள்ளவர்களுக்கு வேறு வாழ்க்கைத் துணை இல்லாதிருத்தல், மனநலம், திருமண வயது, தடை செய்யப்பட்ட உறவு முறைக்குள் வராதது போன்றவற்றின் அடிப்படையிலேயே திருமணத்திற்கான நிபந்தனைகள் சட்டப்பிரிவில் வகுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இரோம் சர்மிளாவின் திருமணத்தில் இந்த நிபந்தனைகளின் மீறலுக்காக மட்டுமே அனுமதி மறுக்க திருமண அலுவலருக்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால் இந்த திருமணத்துக்கு ஆட்சேபனை தெரிவிப்பவரின் மனு தனித் திருமண சட்டப் பிரிவு நிபந்தனை மீறல் என்ற அடிப்படையில் அமைந்தவை அல்ல. இதற்கு தொடர்பில்லாத வேறு காரணங்களே குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே மனுதாரர் ஆட்சேபனை தெரிவித்த மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் சார்பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து இரோம் சர்மிளாவின் திருமணத்துக்கு உள்ள தடை நீங்கியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வருகிற 16–ந் தேதி அவருடைய திருமணம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இரோம் சர்மிளாவின் நண்பர்கள் தெரிவித்தனர்.