நகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் தயாரித்த விதைப்பந்துகள்
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் 30 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரிடம் வழங்கினர்.
திருவண்ணாமலை,
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கலந்துகொண்டு, மாணவிகள் தயாரித்த 30 ஆயிரம் விதைப்பந்துகளை பெற்றுக் கொண்டு மாணவிகளை பாராட்டினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும், அவற்றை பராமரிக்கவும் பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு ஆர்வத்தை அளிக்க வேண்டும். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 5 லட்சம் விதைப்பந்துகளை மாணவர்கள் மூலமாக தயார் செய்து வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கடந்த 2 வாரங்களில் 30 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்து உள்ளனர்.
எனவே, அனைத்து பள்ளி மாணவர்களும் அதிக அளவில் விதைப்பந்துகளை தயாரித்து தற்போது மழைக்காலம் என்பதால் காடுகள், தரிசு நிலங்கள், சாலையோரங்கள், ஆறு, கால்வாய் ஓரங்கள் ஆகிய இடங்களில் இட வேண்டும். அது பிற்காலத்தில் பெரிய மரங்களாக வளர்ந்து சுற்றுச்சூழலுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.இந்த விதைப்பந்துகளை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கோ.மூர்த்தி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
விதைப்பந்துகள் செய்முறைசெம்மண், பசுஞ்சாணம், பயன்படுத்தப்பட்ட டீத்தூள், காபித்தூள், காய்கறி சருகுகள் உள்ளிட்டவற்றை பிசைந்து உருண்டைப்பிடித்து அதனுள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விதைகளை வைத்து ஒரு நாள் நிழலில் உலர்த்த வேண்டும். அதன்பிறகு இளம் வெயிலில் அளவுக்கு ஏற்றவாறு 2 அல்லது 3 நாட்கள் உலர்த்த வேண்டும் என்று மாணவிகள் கூறினர்.