நெஞ்சைத் தொட்ட தமிழ் போலீஸ் அதிகாரி!
கனடாவில் தமிழ் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது மனிதாபிமானச் செயலால் பரவலாகப் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.
டொரான்டோ ஜேன் தெருவில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் திருட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றிருப்பதாக தமிழ் போலீஸ் அதிகாரி நிரன் ஜெயநேசனுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அவர், குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றபோது, 18 வயதுடைய ஓர் இளைஞர் ஆடையைத் திருடியது தெரியவந்தது. விசாரணையில், அந்த இளைஞர் வேலை நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்காக ஆடை திருடியதை ஜெயநேசன் அறிந்திருக்கிறார்.
அந்த இளைஞர் வறுமையில் வாடுவதையும், ஒரு வேலை தேடிக்கொள்வதன் மூலம் தனது குடும்பத்துக்கு உதவ முயல்வதையும் ஜெயநேசன் தெரிந்துகொண்டிருக்கிறார்.
கடைக்காரரிடம் சமரசம் பேசி இளைஞரை விடுவித்த போலீஸ் அதிகாரி ஜெயநேசன், அந்த இளைஞருக்கு எதிராக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததுடன், அவர் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக ஆடை வாங்கிக்கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஊடகத்தில் பேசிய ஜெயநேசன், ‘‘அந்த இளைஞன் வறுமையின் காரணமாகவே ஆடை திருடிவிட்டான், அவனுக்கு வேறு எந்தத் தீய நோக்கமும் கிடையாது. அந்த இளைஞனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது மாத்திரமே என் மனதில் இருந்தது. அவன் உண்மையாகவே தவறு செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போலீஸ் அதிகாரி ஜெயநேசனின் செயலைப் பார்த்து மற்றொரு போலீஸ் அதிகாரி அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். “ஜெயநேசன் ஒரு சிறப்பான செயலைச் செய்துள்ளார். அவருக்கு அந்த உதவியில் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. சிறந்த மனிதாபிமானத்தை அவரிடம் பார்க்க முடிந்தது. அந்த போலீஸ் அதிகாரி ஓர் எடுத்துக்காட்டாகச் செயல்பட்டிருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மட்டுமின்றி, மேலும் பலரும் தமிழ் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
Related Tags :
Next Story