தூத்துக்குடியில் துப்புரவு பணி கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் துப்புரவு பணி கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Aug 2017 3:00 AM IST (Updated: 12 Aug 2017 4:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் துப்புரவு பணியை கலெக்டர் வெங்கடேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் துப்புரவு பணியை கலெக்டர் வெங்கடேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

துப்புரவு பணி

தூத்துக்குடி மாவட்டத்தில், தூய்மை தூத்துக்குடி என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை, தூய்மைப்படுத்தும் விதமாக, தூய்மை தினம் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் முதற்கட்ட துப்புரவு பணியை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னமணி நகர் பகுதியில் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கலெக்டர் வெங்கடேஷ் பேசியதாவது:–

துப்புரவு பணி

தூத்துக்குடி மாவட்டத்தை சுகாதாரமான, நோயற்ற மாவட்டமாக உருவாக்கும் வகையில் தூத்துக்குடி மாநகரத்தில் தூய்மை தினத்தின் முதல்கட்ட துப்பரவு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகரத்தை தூய்மையாக மாற்றிட தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் முதல்கட்டமாக குப்பைகளை அகற்றும் பணி இன்று (அதாவது நேற்று) முதல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சின்னமணி நகர் பகுதியில், குப்பைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

இந்த தூய்மை பணியில் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 700 மாணவ, மாணவிகள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் 950 நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 1,200 பள்ளி மாணவ, மாணவிகள், காவல்துறை, கடலோர காவல்படை, மாவட்ட விளையாட்டு மையம், நேரு யுவகேந்திரா, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு

இது சுத்தப்படுத்தும் பணி மட்டும் அல்ல. பொதுமக்களிடையே குப்பைகளை தெருவில் கொட்டுவதால் ஏற்படும், சுகாதாரக்கேடுகள், தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகும். பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை, அருகில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் தங்களது பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தூய்மை பணிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், இதுபோன்ற துப்புரவு பணிகள் தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் தூய்மை தூத்துக்குடி திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பரிசுகள்

அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை, தூய்மைப்படுத்தும் பணியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் 3 பேருக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.3 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து இருந்ததற்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி, சண்முகராஜ் ஆகியோருக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு மாற்றத்திற்கான உறுதிமொழியை காமராஜ் கல்லூரி மாணவிகள், கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலையில் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக்ஜேக்கப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், தூத்துக்குடி, நெல்லை அண்ணா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) சக்திநாதன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ராஜலிங்கம், தூத்துக்குடி தாசில்தார் ராமசந்திரன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story