குப்பை கொட்டும் தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
பல்லாவரம்–துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஓரங்களில் குப்பை கொட்டும் தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் ரேடியல் சாலை 200 அடி அகலம் உள்ளது. இதில் தற்போது 100 அடி வரை சாலை போடப்பட்டு சாலையின் இரு பகுதிகளிலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தலா 50 அடி நிலம் உள்ளது. சாலையின் இரு பகுதிகளிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இரவு நேரங்களில் தனியார் வாகனங்களில் இறைச்சி கழிவுகள், ரசாயன கழிவுகள், கழிவு துணிகள், பிளாஸ்டிக் குப்பைகள், கழிவு உணவு பொருட்கள், காலாவதியான மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து இந்த ரேடியல் சாலை ஓரங்களில் உள்ள இரும்பு தடுப்பு அருகே கொட்டி விட்டு செல்கின்றனர்.
இந்த குப்பைகளால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையின் இரு பகுதிகளிலும் மற்றும் பல்லாவரம், கீழ்கட்டளை ஏரி கரை பகுதியிலும் கடுமையாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறியதாவது:–
வாகனங்கள் பறிமுதல்பல்லாவரம்–துரைப்பாக்கம் ரேடியல் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் தனியார் வாகனங்களில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றனர். ரேடியல் சாலை பகுதியில் குப்பைகள் கொட்ட தடை செய்யப்பட்டு உள்ளது. தடையை மீறி இரவு நேரங்களில் குப்பைகளை கொட்டும் வாகனங்கள் மீது 1939 தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகளை கொட்டும் தனியார் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து காவல் துறை மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போல அத்துமீறி குப்பைகளை கொட்டும் வாகனங்கள் குறித்து பல்லாவரம் நகராட்சிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி 1800–425–1600 என்ற எண்ணில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.