நசரத்பேட்டை அருகே கர்நாடக மாநில சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 44 பயணிகள் உயிர் தப்பினர்


நசரத்பேட்டை அருகே கர்நாடக மாநில சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு 44 பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:45 AM IST (Updated: 13 Aug 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

நசரத்பேட்டை அருகே கர்நாடக மாநில அரசு சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 44 பயணிகள் உயிர் தப்பினர்.

பூந்தமல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு அரசு சொகுசு பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்சை டிரைவர் ஸ்ரீதரா (வயது 46) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக ராமச்சந்திரன் (52) இருந்தார். பஸ்சில் 28 ஆண்கள், 15 பெண்கள், 1 குழந்தை என 44 பேர் பயணம் செய்தனர்.

நேற்று காலை 8 மணி அளவில் பெங்களூரு–கோயம்பேடு சாலையில் திருமழிசை கூட்டு சாலை நசரத்பேட்டை அருகே பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் பின் பகுதியில் உள்ள என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

பயணிகள் இறங்கினர்

இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பஸ் டிரைவர் ஸ்ரீதராவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர், பஸ்சை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது பஸ்சின் பின்புறத்தில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சில் இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் உடனடியாக கீழே இறங்கும்படி அறிவுறுத்தினார். பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். பஸ்சின் பக்கவாட்டில் இருந்த பயணிகளின் உடமைகளையும் அவசர அவசரமாக வெளியே எடுத்து போட்டனர்.

தீப்பிடித்து எரிந்தது

சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. வானத்தை நோக்கி கரும்புகை வெளியேறியது. அந்த பகுதியே புகை மூட்டமானது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஏ.சி. வசதி கொண்ட பஸ் என்பதால் அதில் உள்ள ‘கம்பிரசர்’ வெடிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக சுமார் 50 மீட்டரை சுற்றி எந்த வாகனங்களும் செல்லாத வகையில் தடை விதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தால் பெங்களூரு–கோயம்பேடு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தன.

பஸ்சின் பின்புறத்தில் புகை வந்த உடன் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சில் இருந்த பயணிகளை உடனடியாக இறக்கி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 44 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையடுத்து பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story