பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வலியுறுத்தி குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு
திருவாடானை தாலுகா மங்கலக்குடி பிர்க்கா விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வலியுறுத்தி குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு சுமார் 48,000 எக்டேர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் நடைபெற்றது. ஆனால் பருவமழை பொய்த்துவிட்ட நிலையிலும், போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் அனைத்தும் முழுமையாக கருகியதால் குண்டு மணி நெல் கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் திருவாடானை தாலுகா முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் இப்பகுதி விவசாயிகளும் முழுமையான பாதிப்புகளுக்கு ஆளாகிஉள்ளனர். இந்நிலையில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் மங்கலக்குடி பிர்க்காவில் மட்டும் 10–க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் முழுமையாக பயிர் இழப்பீட்டு தொகை பட்டியலில் விடுபட்டுஉள்ளது. மேலும் இந்த தாலுகாவில் பல வருவாய் கிராமங்கள் முழுமையாக விடுபட்டுப்போய் உள்ளது. சில பிர்க்காவை சேர்ந்த பல வருவாய் கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை மிகக் குறைவான அளவே நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து மங்கலக்குடி பிர்க்காவை சேர்ந்த விவசாயிகள் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கங்கள் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று அந்த போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால் திருவாடானையில் மிகப்பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை.
திருவாடானை தாலுகா மங்கலக்குடியில் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் யூனியன் துணை தலைவர் ராமகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகானந்தம், விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கடம்பூர் துரை விசுவநாதன், கூகுடி சுப்பிரமணியன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் கணேசன், மங்கலக்குடி கூட்டுறவு சங்க தலைவர் ஹாமின், நெய்வயல் முரளி, சேந்தனி பழனி, காங்கிரஸ் வட்டார தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துத்தாக்குடி முத்துராமலிங்கம், பொன்னையா சேர்வை உள்பட 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் மங்கலக்குடி பிர்க்காவில் மட்டும் 10–க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் முழுமையாக பயிர் இழப்பீட்டு தொகை பட்டியலில் விடுபட்டுஉள்ளது. மேலும் பல வருவாய் கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விடுபட்டுஉள்ளது. இதனால் திருவாடானை தாலுகாவை சேர்ந்த பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனுக்கொடுத்தும் போராட்டங்களை நடத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை வழங்குவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்தோ, மாவட்ட நிர்வாகத்திடம் இருந்தோ எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை. எனவே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடும்பத்துடன் சாலை மறியலில் விவசாயிகள் ஈடுபடுவது எனவும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறும்போது, திருவாடானை தாலுகா மங்கலக்குடி பிர்க்காவை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை முழுமையாக வழங்கும் வரை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அரசின் கவனத்தை ஈற்கும் வகையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.