பிற்படுத்தப்பட்டோர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் 2 கோடி ரூபாய் கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறு வணிகம் செய்ய ஒருவருக்கு, அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. “மகிளா சம்ரிதி யோஜனா“ திட்டத்தின் கீழ் மகளிர் தொழில் முனை சிறு கடன் வழங்கப்படுகிறது. மகளிர் குழு உறுப்பினர்கள், தனியாகவோ அல்லது குழுக்களாகவோ கடன் பெறலாம். ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரம் மற்றும் நகர்புறமாயின் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கடன் விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் (கலெக்டர் அலுவலகம்), விருதுநகரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் அந்த அலுவலகங்களையும், வங்கிகளையும் நேரில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.